×

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு

காந்திநகர்: குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து குஜராத் முழுவதும் மோதல்கள் வெடித்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இப்போதைய பிரதமர் மோடி. இந்த வன்முனை சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, மோடி உள்பட 64 பேர் விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘சிவபெருமான் விஷத்தை அருந்தியது போல குஜராத் வன்முறைகள் தொடர்பான பொய்களை பிரதமர் மோடி தாங்கி கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை போல சிறப்பு விசாரணை குழு முன்பான விசாரணையின் போது பிரதமர் மோடி சத்தியாகிரக நாடகம் நடத்தவில்லை. விசாரணையை எதிர்கொண்டோம். இப்போது பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களை காங்கிரசார் கொன்று குவித்தனர். அதில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பேட்டியை தொடர்ந்து, 2002 குஜராத் வன்முறைகள் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்குகள் தொடர்ந்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது செய்து மும்பையின் சாண்டாகுரூஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து குஜராத் மாநிலம் அழைத்து செல்லப்பட உள்ளார். அவரை தொடர்ந்து குஜராத் மாநில முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Testa Chedalvat , Sudden arrest of social activist Teesta Setalvath: Accused of producing fake documents and prosecuting
× RELATED அயலகத் தமிழர் நலவாரியத்தில்...